பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் பங்கேற்கும் இந்திய அணியினரை டாக்டர் மன்சுக் மாண்டவியா வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள 2024-ம் ஆண்டுக்கான பாராலிம்பிக்ஸ் (மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்) போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினரை வழியனுப்பும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்திய வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா கட்சேவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அமைச்சர் மாண்டவியா, நமது பாரா தடகள வீரர்கள், தடைகளை தகர்த்தெறிந்து, சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் அசாத்திய திறன் பெற்றவர்கள் என்றார். பாரா தடகள வீரர்கள் இந்தியர்கள் என்ற உணர்வோடு, 140 கோடி மக்களுக்கு உத்வேகம் அளிப்பவர்களாக திகழ்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டிய டாக்டர் மாண்டவியா, ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு திட்டத்தின் கீழ் 50 பாரா தடகள வீரர்களுக்கு உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.