கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், போராட்டம் மேற்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு கொடுமை நடந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் மற்றும் அமைதி ஊர்வலத்தை நடத்தினர். இதில் மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாலியல் வன்முறைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பூபதி ஜான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார். மேலும் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 10 ஆண்டுகால தண்டனை சட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கூறனார்.
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த பெண் மருத்துவருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும், பாலியல் வன்முறைக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.