மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
கொல்கத்தாவின் ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு எதிரான சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோர்டா), இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) மற்றும் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்துள்ளனர்.
பணியிடத்தில் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து சங்கங்கள் தங்கள் கவலைகளை முன்வைத்துள்ளன. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பிரதிநிதிகளின் கோரிக்கைகளைக் கேட்டு, சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர்களுக்கு உறுதியளித்துள்ளது.
அரசு நிலைமையை நன்கு அறிந்துள்ளது என்றும் அவர்களின் கோரிக்கைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளது என்றும் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.
26 மாநிலங்கள் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. சங்கங்கள் வெளிப்படுத்திய கவலைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இதுபோன்ற அனைத்து நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைப்பதாக அமைச்சகம் அவர்களுக்கு உறுதியளித்தது. மாநில அரசுகள் உட்பட அனைத்து பங்குதாரர்களின் பிரதிநிதிகளும் தங்கள் ஆலோசனைகளை குழுவுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுவார்கள்.
பொது நலன் கருதியும், டெங்கு மற்றும் மலேரியா பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தங்கள் கடமைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அமைச்சகம் கேட்டுக் கொண்டது..