டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்தால், கவலைப்படுவதுதான் மக்கள் நலன் காக்கும் அரசா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழக டாஸ்மாக் கடைகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் மது விற்பனை 4% குறைந்திருப்பது குறித்து தமிழக அரசு பெரும் கவலை கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக் மது விற்பனையை மாதம் 5% அதிகரிக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக வெளியான செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக வேதனை தெரிவித்துள்ள ராமதாஸ்,
மக்கள் நலன் காப்பதாகக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, மது விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தான் அரசை நடத்த வேண்டும் என்றால் அதை விட அவமானம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள ராமதாஸ்,
தேர்தலின் போது மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.