பர்கூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக எழுந்த புகாரில், பள்ளி முதல்வர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஐந்தாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை போலி என்சிசி முகாம் நடத்தியது தெரியவந்தது.
அத்துடன், போலி என்.சி.சி. பயிற்றுனருக்கு உடந்தையாக செயல்பட்ட மேலும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு அளித்த பேட்டியில், எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
பாலியல் தொல்லை புகார் குறித்து மாணவிகள் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், என்.சி.சி. முகாம் தொடர்பாக பள்ளி முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் ஆட்சியர் கே.எம்.சரயு குற்றச்சாட்டினார்.
இதனிடையே, என்.சி.சி. முகாமில் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை புகார் தொடர்பாக என்.சி.சி. தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்.சி.சி. மூலமாக எந்த முகாமும் நடத்தப்படவில்லை என்றும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் என்.சி.சி-க்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் என்.சி.சி. தலைமையகம் தெரிவித்துள்ளது.