கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய மருத்துவர் சந்தீப் கோஷ் யார்? அவர் பின்னணி என்ன ? என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் RG கர் மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த திகிலூட்டும் கொடூர சம்பவம் நாடெங்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
RG கர் மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் சந்தீப் கோஷ் பதவி விலக வேண்டும் என்று மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, டாக்டர் சந்தீப் கோஷ் பதவி விலகினார்.ஆனால் உடனடியாக கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரியில் முதல்வராக பணி நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் , அடுத்த உத்தரவு வரும் வரை டாக்டர் சந்தீப் கோஷ்ஷை மற்ற மருத்துவக் கல்லூரியில் நியமிக்க கூடாது என கொல்கத்தா உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
RG கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்தது தொடர்பாக, பெற்றோரிடம் தாமதமாக தகவல் தெரிவித்தது, கொலை நடந்த இடத்தைப் புதுப்பித்தது போன்ற குற்றச்சாட்டுகள் சந்தீப் கோஷ் மீது வந்தன.
இக்கொலை தொடர்பாக , சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாரிகள், அவரிடம் சுமார் 53 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளனர்.
பங்கான் நகரில் பிறந்த சந்தீப் கோஷ், RG கர் மருத்துவக் கல்லூரியில் 1994ம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார். 2021 ஆம் ஆண்டு அதே மருத்துவ மனையின் முதல்வரானார். முதல்வர் ஆவதற்கான தகுதி அடிப்படையில் 13வது இடத்தில் இருந்த போதிலும் தன் அரசியல் செல்வாக்கால் பதவி பெற்றதாக கூறப்படுகிறது.
RG கர் மருத்துவமனையின் முதல்வராக இருந்த காலத்தில், நிதி முறைகேடுகள், சட்டவிரோத மிரட்டி கமிஷன்கள் மூலம் பணம் பறித்தல் மற்றும் மருத்துவ மனையின் அனைத்து டெண்டர்களில் முறைகேடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக டாக்டர் சந்தீப் கோஷ் மீது குற்றம் சாட்டுக்கள் உள்ளன.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், மாணவர்களைத் தேர்வில் ஃபெயில் ஆக்கி விட்டு, 20 சதவீதம் கமிஷன் வாங்கியதாகவும், மருத்துவமனைக்குட்பட்ட விருந்தினர் மாளிகையில் மாணவர்களுக்கு மது விருந்து வைத்ததாகவும் டாக்டர் சந்தீப் கோஷ் மீது புகார்கள் உண்டு.
மாநில சுகாதாரத் துறை வரை புகார்கள் குவிந்ததால், இரண்டு முறை இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும்,தன் அரசியல் செல்வாக்கால் மீண்டும் இதே கல்லூரிக்கு முதல்வராக வந்து விட்டார் என்கிறார்கள்.
கல்லூரிக்கே தான் மாஃபியா டான் என்ற ரீதியில் நடந்து கொண்ட டாக்டர் சந்தீப் கோஷ் மீது 2021 ஆம் ஆண்டு முதல் எழுந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக காவல் துறை தலைவர் பிரணாப் குமார் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு தன் விசாரணையைத் தொடங்கி இருக்கிறது.
ஒரு புறம் நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க சிபிஐ விசாரணை , உச்ச நீதிமன்ற விசாரணை , தேசிய மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் பாதிக்கப்பட்ட அந்த பெண் பயிற்சி மருத்துவரின் கொலைக்கான உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதோடு இது போன்ற கொடுரச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.