கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அமைதியைக் கொண்டு வருவதற்கான சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி உக்ரைன் செல்லும் வழியில் போலந்து நாட்டுக்கும் பயணம் செய்ய உள்ளார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
1991ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி உக்ரைனின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் வெளிநாட்டு நாடு போலந்தும், இந்தியாவும் தான். 1992ம் ஆண்டு உக்ரைனில் இந்தியாவின் தூதரகம் தொடங்கப்பட்டது.
ரஷ்யாவிற்கு அடுத்த பெரிய நாடுகளாக உக்ரைன் மற்றும் போலந்து உள்ளன. இரு நாடுகளும் சுமார் 529 கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
உக்ரைனில் தான் அதிக எண்ணிக்கையிலான போலந்து தூதரகங்கள் உள்ளன. ஐரோப்பிய பாதுகாப்புக் கொள்கையில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய போலந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் உக்ரைன் உறுப்பினர் ஆவதைப் போலந்து ஆதரிக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்றே, ரஷ்ய படையெடுப்பைக் கண்டித்து போலந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு ஒன்பது வரவேற்பு மையங்களை அமைத்து கொடுத்தது.
எனினும், கடந்த செப்டம்பர் முதல் உக்ரைனுக்கும் போலந்துக்கும் இடையே உறவில் பிளவு உண்டானது. உக்ரேனிய தானியங்கள் மீதான போலந்து இறக்குமதி தடை விதித்தது. இதற்கிடையே முன்னர் ஒப்புக்கொண்டதைத் தவிர வேறு ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கப்போவதில்லை என போலந்து முடிவு செய்தது.
2014ல் கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியபோது, ஐநா சபையில் அதைக் கண்டிக்கும் தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேச தடைகளை இந்தியா ஆதரிக்கவில்லை. நவம்பரில் கிரிமியாவில் ரஷ்யா நடத்திய மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஐ நா சபையில் உக்ரைன் கொண்டு தீர்மானத்துக்கு எதிராக இந்தியா வாக்களித்தது.
மேலும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு முழுவதும், ஐ நா சபையில், உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் நோக்கத்தில் பல தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகியே இருந்தது.
இதற்கிடையில் ரஷ்யா- இந்தியா உச்சி மாநாட்டுக்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றதை அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் விமர்சனம் செய்தன. உக்ரைன் அதிபரும் பிரதமரின் ரஷ்யா பயணத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, கடந்த மாதம் இத்தாலியின் அபுலியாவில் நடந்த G7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வுக்கு இந்தியா தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்யும் என்று உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் தான் பல ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய ஐரோப்பிய நாடான போலந்துடன் உறவை மேம்படுத்த, பிரதமர் மோடி, உக்ரைன் செல்லும் வழியில் அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 24ம் தேதி உக்ரைன் நாட்டின் தேசிய தினத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி உக்ரைன் பயணத்திற்கு முன்னதாக போலந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
1979ம் ஆண்டு பிரதமர் மொராஜி தேசாய்க்குப் பிறகு பாரதப் பிரதமர் ஒருவர் போலந்துக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.
அனைத்து சர்வ தேச நாட்டுத் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் பிரதமர் மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன
போலந்தில் இருந்து உக்ரைனுக்கு சென்று அதிபர் ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பவன் கபூர், உக்ரைன் சென்று இதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தார்.
உக்ரைன் ரஷ்யா போரை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ரஷ்யாவுடன் உறவை நல்ல விதமாக வைத்திருக்கும் அதே வேளையில், மேற்குலக நாடுகளுடனான உறவையும் மேம்படுத்தும் பிரதமர் மோடியின் ராஜதந்திரத்தை உலகமே ஆச்சரியமாக பார்க்கிறது.