அரசு பேருந்துகளை நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் இயக்காமல் புறவழிச் சாலையில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் நகரங்களுக்கிடையே இயக்கப்படும் 7 ஆயிரத்து 880 பேருந்துகளில் சில, நகரங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் இயக்கப்படாமல், புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுவதாகவும், அட்டவணைப்படி செல்லாமல் பாதி வழியிலேயே திருப்பி இயக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், கடும் அவதிக்கு உள்ளான பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் விதமாக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதில், கால அட்டவணையை பின்பற்றாமல், புறவழிச்சாலையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர் மீது பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.