தமிழகத்தில் MBBS, BDS ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி கலந்தாய்வு தொடங்கியது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு 9 ஆயிரத்து 200 இடங்களும், பிடிஎஸ் படிப்புக்கு 2 ஆயிரத்து 150 இடங்களும் உள்ளன. இவற்றில் சேர இந்தாண்டு 4 ஆயிரத்து 336 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 19ம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து MBBS, BDS ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வு தொடங்கியது.
வரும் 27ம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தோ்வு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்புப் பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது.
இதற்கிடையே நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்த நாமக்கல் மாணவர் ரஜனீஷ், அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.