சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியா போதிய ஆவணங்களை சமர்ப்பித்தால், அவரை நாடுகடத்துவது தொடர்பாக பரீசிலிக்க தாம் தயாராக இருப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக் வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர் மீது கடந்த 2016-இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மலேசியாவுக்கு தப்பிச்சென்ற அவர், அங்கு நிரந்தர குடியுரிமை பெற்று வசிப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜாகிர் நாயக்கை நாடுகடத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியா ஆவணங்களை சமர்ப்பித்தால், அவரை நாடுகடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதேவேளையில், மலேசியாவில் இந்தியாவுக்கு எதிராக அவர் எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை என அன்வர் இப்ராஹிம் கூறினார்.