தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை ஸ்ரீ பிரசன்ன கோதண்ட ராமர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் வேத மந்திரங்களுடன் கோபுர கலசத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள படைவெட்டி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்பட்ட நிலையில் பக்தர்கள் முன்னிலையில் கோயில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
கரூர் மாவட்டம், வெள்ளாளப்பட்டி ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டு கோபுர கலசத்திற்கு தீபாராதணை காட்டப்பட்டது. இதையடுத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட புனித நீர் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதே போல, ஈரோட்டில் அமைந்துள்ள கொண்டத்து பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழாவானது கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றபட்டு தீபாராதனை காண்பிக்கபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பனங்குடி அய்யனார் கோவிலில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கலசத்திற்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
















