எந்த பிரச்னைக்கும் தீர்வு காணவும், அமைதியை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் உடன் இணைந்து பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :
நீண்ட காலமாக போலந்து – இந்தியா இடையே தொடரும் நட்புறவை மேலும் வலுபடுத்த டொனால்ட் டஸ்க் சிறந்த பங்களிப்பை ஆற்றி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மோடி, ரஷியா- உக்ரைன் போரின்போது உக்ரைனில் சிக்கியிருந்த இந்திய மாணவர்களை மீட்க போலந்து செய்த உதவியை மறக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட போலந்து, இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
எந்தவொரு நெருக்கடியிலும் அப்பாவி உயிர்கள் பலியாவது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தை இந்தியா ஆதரிக்கிறது என்றும் அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினார்.
உணவு பதப்படுத்துதலில் போலந்து உலகளவில் முன்னிலையில் உள்ளது. இந்த தொழிலுடன் தொடர்பில் உள்ள போலந்து நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
நீர்மேலாண்மை, கழிவு பொருட்கள் மேலாண்மை, நகர்ப்புற கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.