கொல்கத்தாவில் உள்ள முன்னாள் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
கடந்த சில நாட்களாக மாணவியின் மரணத்திற்கான சாத்தியக் கூறுகள், ஆதாரங்கள் குறித்து மருத்துவமனை முழுவதிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி ஆராய்ந்து வருகின்றனர். இதனிடையே, ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி தொடர்ந்த ஊழல் வழக்கில் சந்தீப் கோஷ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், மருத்துவக் கல்லூரியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தவும் சிபிஐக்கு ஆணையிட்டது. இதனை தொடர்ந்து, ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், கொல்கத்தாவில் உள்ள சந்தீப் கோஷுக்கு உறவினர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.
















