ஐஸ்லாந்தில் நாட்டு மக்கள் அதிகம் சாப்பிடாத வெள்ளரிக் காய்க்கு திடீரென்று அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம் ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் ஒரு உணவகத்தைப் பற்றியோ ஒரு திரைப்படத்தைப் பற்றியோ ஒரு ஆடையைப் பற்றியோ ஒரு பரிந்துரை வந்தால் , வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் என்று கடந்து செல்வது தான் பெரும்பாலான மக்களுக்கு வழக்கம்.
ஆனால் ஐஸ்லாந்து மக்கள், ஒரு படி அல்ல… பல படிகள் தாண்டி போயிருக்கிறார்கள். அதனால் என்ன என்று தானே கேட்கிறீர்கள் ? அதன் விளைவாக நாட்டில் பற்றாக்குறையே ஏற்பட்டிருக்கிறது.
வெயில் சுட்டெரிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் குளிர்ச்சிக்காக வெள்ளரிக்காயை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் ஐஸ்லாந்தில் பெரும்பாலும், சுறா, ஆட்டின் மாமிசம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களே அந்நாட்டு உணவு வகைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்நிலையில் தான் இப்போது ஐஸ்லாந்து மக்களுக்கு வெள்ளரிக்காய் மோகம் பிடித்திருக்கிறது.
மக்களின் இந்த வெள்ளரிக்காய் மோகத்தால், நாடு முழுவதும் வெள்ளரிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றிக்கும் காரணம் வெள்ளரிக்காய் பையன் தான் என்று உள்ளூர் மளிகை கடை காரர்கள் கூறுகிறார்கள்.
கனடாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் லோகன் Moffitt தான் “வெள்ளரிக்காய் பையன்” என்று அழைக்கப்படுகிறார்,.
சுமார் 5.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன், தனது கவர்ச்சியான வெள்ளரி சாலட் ரெசிபிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அதிலும் கடந்த ஜூலை முதல் தினமும் ஒரு வெள்ளரிகாய் சமையல் குறிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
தனது வீடியோவின் தொடக்கத்தில், வெள்ளரியைச் சில நேரங்களில் அப்படியே சாப்பிட வேண்டும் என்று கூறினாலும், பிறகு, வெட்டிய வெள்ளரித் துண்டுகளுடன் எள்,சோயா சாஸ், புளிப்பு கிரீம், மிளகாய் எண்ணெய், பாலாடைக்கட்டி, தக்காளி, வெங்காயம், மிளகு,பூண்டு,ரைஸ் வினிகர் போன்ற சுவையை அதிகரிக்கும் பல்வேறு பொருட்களையும் சேர்த்து சமையல் செய்கிறார்.
#Cucumber என்ற ஹாஷ் டேக் இன்ஸ்டாகிராமில் மட்டும் நான்கு மில்லியனுக்கும் அதிகமாக பகிரப் பட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சாலட் ரெசிபிகள் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 1, 50,000 க்கும் மேலாக வெள்ளரி வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன.
இதனால் வெள்ளரிக்கு ஐஸ்லாந்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு ஒரு விவசாய வெற்றியை இன்ஸ்டா வீடியோ பெற்று தந்துள்ளது என்று ஐஸ்லாந்தின் விவசாயிகள் சங்கத்தை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
குரோனனின் ஆன்லைன் ஸ்டோர், வெள்ளரிகளை தவிர, எள் எண்ணெய், அரிசி வினிகர் மற்றும் மீன் சாஸ் போன்ற வைரல் ரெசிபிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பொருட்களைத் தேடி வாங்கும் ஆர்வம் 200 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இரட்டிப்பு தேவை காரணமாக எள், எண்ணெய் போன்றவை பல கடைகளில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஐஸ்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐஸ்லாந்தில் உள்ள காய்கறி விவசாயிகளுக்கான ஐஸ்லாந்தின் விவசாயிகள் சங்கத்தின் சந்தைப் படுத்துதல் இயக்குனர் கிறிஸ்டின் லிண்டா ஸ்வீன்ஸ்டோட்டிர், வெள்ளரிக்காய் வெறித்தனம் நாட்டை இக்கட்டான சுழலுக்குத் தள்ளியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
3, 93,600 மக்கள்தொகை கொண்ட ஐஸ்லாந்தில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் சுமார் ஆறு மில்லியன் வெள்ளரிகளை உற்பத்தி செய்கிறார்கள்.
சில வெள்ளரி விவசாயிகள் இப்போது மாற்று தாவர விவசாயத்துக்குச் செல்கின்றனர். எனவே, வெள்ளரி உற்பத்தி தற்காலிகமாக குறைவாக உள்ளது என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.
இப்படி நடப்பது இதுவே முதல் முறையல்ல . ஏற்கெனவே 2020 ஆம் ஆண்டில், டல்கோனா காபி பற்றி சமூக ஊடகங்களில் வந்த பிறகு உடனடியாக காபியின் விற்பனை அதிகரித்துள்ளது.