ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு இந்திய ஆண்கள் ஹாக்கி வீரர்களின் வருமானம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. அதிக பட்சமாக வருமானம் 30 சதவீதம் உயரலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1980ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலத்தைக் கைப்பற்றி நாடு திரும்பி இருக்கிறது. இந்த ஒலிம்பிக் வெற்றி, ஹாக்கி விளையாட்டின் பக்கம் பல இந்திய இளைஞர்களை வரவழைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஹாக்கி உலகின் மிகப் பழமையான விளையாட்டுகளில் ஒன்றாகும். 4,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் விளையாடப்பட்ட விளையாட்டு ‘ஹோக்கி’ என்று அழைக்கப்பட்டது. 1527 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் ஹாக்கி பிரபலமானது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆங்கிலேயர்களால் ஹாக்கி நவீனப்படுத்தப்பட்டது. குறிப்பாக 1850ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்திய இராணுவத்தில் ஹாக்கி அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்தியாவில் ஹாக்கி விளையாட பெரிய அளவிலான மானாவாரி நிலங்கள் இருந்தன மற்றும் விளையாட ஒரு கட்டை போதும் என்பதால் ஹாக்கி படிப்படியாக இந்தியர்களின் விருப்பமான விளையாட்டாக உருவானது.
நாட்டின் முதல் ஹாக்கி கிளப் 1855 ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. பிறகு பஞ்சாப் மற்றும் மும்பையில் ஹாக்கி விளையாட்டு பரவியது. 1907 மற்றும் 1908 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் ஹாக்கி சங்கம் அமைப்பது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனாலும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு உருவாகி ஓராண்டு கழித்து 1925ம் ஆண்டு இந்திய ஹாக்கி கூட்டமைப்பு (IHF) அமைக்கப்பட்டது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பில் 1927ம் ஆண்டு இந்தியா உறுப்பினரானது. அதற்கு அடுத்த ஆண்டு இந்திய ஹாக்கி அணி தனது முதல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டது.
ஐந்து போட்டிகளில் விளையாடி 29 கோல்களை அடித்த இந்தியா, 1928ம் ஆண்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது. தொடர்ந்து 1932 மற்றும் 1936 ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்தது. 1948, 1952 மற்றும் 1956 ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் சுதந்திர இந்தியாவின் ஹாக்கி அணி தங்கம் வென்றது.
இதுவரை இந்திய ஹாக்கி அணி , ஒலிம்பிக்கில் 8 தங்கம் ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களைக் கைப் பற்றி இருக்கிறது.
நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் காரணமாக, பிரபல நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்துக்காக , இந்திய ஹாக்கி அணி வீரர்களின் பிரபலத்தைப் பயன்படுத்த முன்வந்துள்ளன.
வழக்கமாக தடகள வீரர்களையோ , மல்யுத்த வீரர்களையோ விளம்பரத் தூதராக்கும் முக்கிய பிராண்டுகள் கூட, இப்போது ஹாக்கி வீரர்களைத் தேடி வருகிறார்கள் இதனால் விளம்பரங்களுக்கான ஹாக்கி வீரர்களின் தேவை கிட்டத்தட்ட 100 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று விளம்பரச் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு ஹாக்கி வீரர்களையும் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான புகழுடையவர்களாக கருதும் நிலை வந்துள்ளது. எனவே பெரிய பெரிய நிறுவனங்களும் ஹாக்கி வீரர்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றன.
விரைவில் ஹாக்கி லீக் போட்டிகள் தொடங்க இருப்பதால், ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கான பாதை பிரகாசமாக உள்ளது. குறிப்பாக ஜலந்தர் நகரில் உள்ள பிரபல ஹாக்கி ஸ்டிக் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஆல்ஃபா நிறுவனம், PR ஸ்ரீஜேஷ் மற்றும் மன்பிரீத் சிங் உட்பட ஆண்கள் அணியில் 10 வீரர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது.
ஹாக்கி அணி வீரர்களின் புகழ் அதிகரித்து வருவதால், சமூக ஊடக தளங்களில் அவர்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை “சராசரியாக 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஹாக்கி வீரர்களுக்கு ஸ்போர்ட்ஸ் இன்ஃப்ளூயன்சர் பிரிவில் நுழைவதற்கான நுழைவாயிலைத் திறந்து வைத்திருக்கிறது.
தேவை அதிகமாக உள்ள நிலையில் ஹாக்கி வீரர்கள் அதிக வருமானம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் ஏற்பட்டிருக்கின்றன.
டோக்கியோ ஒலிம்பிக்கின் போது இருந்த உற்சாகம் ஓராண்டுக்குள் மறைந்ததைப் போலல்லாமல், ஹாக்கி வீரர்களுக்கான தேவை இந்த முறை நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.