உள்நாட்டு முதலீடுகளையே தக்க வைக்க முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்வது வேடிக்கையாக உள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சரின் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, “ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் என முதல்வர் வெளிநாடு செல்லும் பட்டியல் நீள்கிறதே தவிர, சிறிதளவு முன்னேற்றம் இல்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை வெளியிட அரசு மறுக்கிறது” என்றும் டிடிவி தினகரன் புகார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் மத்திய பிரதேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கடந்த 3 ஆண்டுகளில் ஈர்க்கப்பட்ட முதலீடு, வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிடவேண்டும் என அறிக்கையில் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.