கட்டுப்பாடுகள் இன்றி நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாந்த் அறிக்கையில்,
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி என்பதை ஒவ்வொரு பகுதிக்கும் முன்மாதிரியாக இருக்கும் வகையில் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் போது உண்மையில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டங்களின் மூலம் சமூக வளர்ச்சி ஏற்படும் என ஏ.என்.எஸ்.பிரசாந்த் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், வியாபார நோக்கத்துடன், கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரால் நடுத்தெருவில் ஆபாச கூத்தும், கும்மாளமுமாக நிகழும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் கலாச்சார சீரழிவுக்கான சூழ்நிலையை உருவாக்கி வருவது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னால் வணிக நோக்கமும், கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கமும் இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு வருபவர்களில் பலர் தன்னிலை மறந்து வருவதாக குற்றச்சாட்டு எழுவதால், அந்நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாந்த் வலியுறுத்தியுள்ளார்.