காரைக்குடி அருகே அடிப்படை வசதி இல்லாத கிராமத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர், நீட் தேர்வினால் மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கமலை கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான நாகராஜ் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த ரவி என்பவரும் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற பயிற்சி மையத்தில் சேர்ந்து இருவரும் பயின்ற நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். நாகராஜுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டிலும், ரவிக்கு அரசு பள்ளிக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. இது குறித்து தமிழ் ஜனம் செய்தியாளரிடம் பேசிய மாற்றுத்திறனாளி மாணவர் நாகராஜ், ஆசிரியர்களின் ஊக்கத்தினால் நீட்தேர்வில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். மேலும், மருத்துவம் படித்து மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றுவேன் என அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய நாகராஜின் தாய் விஜயா, நாகராஜ் பள்ளிக்கு புறப்படும் முன், வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு தான் செல்வதாக கூறினர். பள்ளி விடுமுறை நாட்களில் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டே நீட் தேர்வுக்கு படித்து வந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
நீட் தேர்வில் வெற்றி பெற்ற மற்றொரு அரசு பள்ளி மாணவர் ரவி, தமது படிப்புக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெரும் உதவி செய்ததாக தெரிவித்தார். மேலும், ஏழ்மையில் உள்ளவர்கள் படிப்புதான் முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன் எனக்கூறிய அவர், மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி பயில வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து பேசிய ரவியின் தந்தை உடையப்பன், ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தேவையான உதவிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தங்கள் கிராமத்திற்கு தேவையான பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து தரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் இருந்து வந்து அரசுப் பள்ளியில் பயின்ற 2 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அருள்சாமி தெரிவித்தார். அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் இருந்து அரசு பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் வெற்றி பெற்ற 2 மாணவர்களும் பிற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாக கூறினார்.
நீட் தேர்வில் பெற வேண்டி 2 மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்ததாக இதனை வகுப்பு ஆசிரியர் அந்தோணி தெரிவித்தார். இரண்டு மாணவர்களும் ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி நீட் தேர்வில் வெற்றி பெற்றதாக கூறிய அவர், இருவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.