பெண்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வலியுறுத்தி உள்ளார்.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பெண்களுக்கு எதிரான வக்கிர எண்ணத்துடன் செயல்படுத்தப்படும் குற்றங்களைக் கண்டித்து ஒட்டுமொத்த தேசமும் வெகுண்டெழ வேண்டும் என்றும், பெண்களை அதிகாரமற்றவர்களாக, தகுதியில்லாதவர்களாக, புத்தியற்றவர்களாக கருதும் மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அச்ச உணர்விலிருந்து விடுபட்டு, விடுதலையின் பாதையில் முன்னேறுவதில் உள்ள தடைகளை அகற்றுவதற்கான வாய்ப்பை பெண்களுக்கு அளிக்க வேண்டுமென கூறிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை சம்பவங்கள் போதும் என வேதனை தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை சுட்டிக் காட்டி, நாகரீகமான எந்தவொரு சமுதாயமும் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற கொடூரமான குற்றத்தை அனுமதிக்காது என்றும், இதை எதிர்த்து தேசம் தீரத்துடன் செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.