கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான திருக்கோயில்கள் இருக்கின்றன. எனினும், மாவட்ட தலைநகருக்கு ‘நாகர்கோவில்’ என்று பெயர் வரக் காரணமாக அமைந்திருக்கிறது ஒரு திருக்கோயில். தமிழகத்திலேயே நாகத்தை மூலவராக வைத்து வழிபடும் இந்த புண்ணியத் தலத்தைப் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம்.
நாகர்கோயில் நகரத்தின் மையப் பகுதியில் இந்த நாகராஜா திருக்கோயில் அமைந்திருக்கிறது. கிழக்கு பார்த்த திருக்கோயில் என்றாலும் நீண்ட காலமாகவே தெற்கு கோபுர வாசல் வழியையே எல்லோரும் பயன்படுத்துகிறார்கள்.
முன்னொரு காலத்தில் புதர்மண்டி கிடந்த இப்பகுதியில் ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் கால்நடைகளின் உணவு தேவைக்காக புற்களை வெட்டும் போது ரத்தம் சீறிப் பாய்ந்ததாகவும் ரத்தத்தை கண்டு பயந்த அப்பெண் கிராமத்துமக்களிடம் விஷயத்தை கூறினார்.
குறிப்பிட்ட இடத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலையிலிருந்து ரத்தம் வழிந்தோடியதை கண்ட மக்கள் அச்சிலையை எடுத்து ஓலைக் குடிசை அமைத்து பாலாபிஷேகம் செய்து மஞ்சள் பூசி தெய்வமாக வழிபடத் தொடங்கினார்கள்.
கோயிலைச் சுற்றி ஏகப்பட்ட நாகங்கள் வாழ்ந்து வருவதாகவும், அவையே இந்தக் கோயிலுக்குப் பாதுகாவலர்களாக இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது.
சேர நாட்டின் சிற்றரசாக நெல்லை களக்காட்டைத் தலைநகராக கொண்டு வேணாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த உதய மார்த்தாண்டவர்மா என்ற மன்னனுக்கு தோல்நோய் இருந்தது. ஓடவல்லி செடியைத் தன் உடல் முழுவதும் தேய்த்துக் கொண்டு 41 மண்டலங்கள் இக்கோயிலில் தங்கி வழிபாடு செய்தான். தோல் நோய் முற்றிலும் குணமாகியதன் நன்றியாக இக்கோயிலைக் கட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த தலத்தின் தலமரமாக ஓடவல்லிக்கொடி என்னும் செடி உள்ளது. இன்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த இலையே பிரசாதமாக வழங்கப் படுகிறது.
1950ம் ஆண்டு வரை இக்கோயில் முழுவதும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதன் காரணமாக பூஜைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் கேரள தந்திரிகளே செய்து வருகிறார்கள். தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருந்தாலும் இப்போதும் திருச்சூர் பாம்பு மேக்காட்டுமனா என்ற பாரம்பரியத்தைச் சேர்ந்த தந்திரியே பூஜை செய்து வருகிறார்.
அனைத்து கிருஷ்ணர் கோயில் கொடி மரத்தில் கருடனின் உருவமே இருக்கும். ஆனால் இந்த நாகராஜா கோயிலில் வித்தியாசமாக கொடிமரத்தில் ஆமையின் உருவம் அமைக்கப் பட்டிருக்கிறது.
மூலவரின் கருவறைக்கு விமானத்துக்கு பதிலாக ஓலை குடிசை போல் பின்னப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இந்த ஓலை கொட்டகையை கோயில் நம்பூதிரிகள் மாற்றி அமைக்கின்றனர். ஓலை கொட்டகையை மாற்றி அமைக்கும் போது ஒரு நாகப்பாம்பு வந்து காட்சியளித்து விட்டு செல்வதை இன்றும் பார்க்க முடிகிறது.
மணல் நிறைந்த பகுதியில் நாகராஜா சுவாமி சன்னதி அமைந்திருக்கிறது. இந்த மணலானது 6 மாதத்துக்கு கருமணல் ஆகவும், 6 மாதத்துக்கு வெண்மணலாகவும் நிறம்மாறுகிறது. எனவே இந்த மணலைச் சந்தனம், மற்றும் மஞ்சளுடன் சேர்த்து வைத்து பிரசாதமாக இந்தக் கோயிலில் வழங்கப்படுகிறது.
ஆரம்பத்தில் நாகராஜாவுக்கு மட்டுமே தனி சன்னதி இருந்து வந்ததாகவும், பின்னர் அனந்த கிருஷ்ண சன்னதியும் ஈசன் பாலமுருகன் துர்கை சன்னதியும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மூலவராக ஐந்து தலைகளைக் கொண்ட ஐம்பொன் கவசத்தால் பொதியப்பட்ட நாகராஜா சுயம்புவாக காட்சியளிக்கிறார்.
கடுசர்க்கரையால் ஆன அனந்த கிருஷ்ணன் நின்ற கோலத்தில் ஆடையின்றி மகுடத்துடன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகப் பட்டத்துடன் காட்சியளிக்கிறார்.
அனந்த கிருஷ்ணனின் இருபுறங்களிலும் பத்மாவதி அம்பிகாபதி யட்சிகன் நின்ற கோலத்தில் அருள் புரிகின்றனர். இவர்களின் சிரசுக்கு மேல் மூன்று தலை நாகம் படமெடுத்த நிலையில் அமைந்திருக்கிறது.
மூலவர் நாகராஜா சன்னதி மற்றும் அனந்த கிருஷ்ணன் சன்னதிக்கு இடையே ஈசன் சன்னதி உள்ளது.
ஒரு காலத்தில் இந்த கோயிலின் தெப்பக்குளத்தை தூர்வாரும்போது கிடைக்கப்பெற்ற துர்கை அம்மன் தீர்த்த துர்கை என்று அழைக்கப்படுகிறாள். மேலும் அம்மாச்சி துர்க்கா என்ற இந்த துர்கையை செவ்வாய்க் கிழமை ராகு காலத்தின் போதுவழிபட்டால் நாகங்களின் தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஆண்டுதோறும் தை மாதம் இக்கோயிலில் திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. 9ம் நாள் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தேரோட்டத்தின் போது பாமா ருக்மணியுடன் அனந்தகிருஷ்ணன் வீதி உலா புரிந்து பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
இந்த கோயிலுக்கு வந்து நாகராஜா சுவாமியையும் அனந்த கிருஷ்ண சுவாமியையும் வழிபட்டால் வாழ்வில் அனைத்து நலன்களும் பெருகும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.