ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஜன் தன் யோஜனா திட்டம் 10 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடியின் ஜன் தன் யோஜனா என்று அழைக்கப்படும் மக்கள் வங்கித் திட்டம், நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் வங்கி சேவைகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதாகும்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி , 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் குறிப்பிட்டு, இந்த திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவரையும் பாராட்டி இருக்கிறார். மேலும், ஜன்தன் யோஜனா திட்டம், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் முதன்மையானதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதன்முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற உடன் தனது முதல் சுதந்திர தின உரையில், இந்தத் திட்டத்தைப் பிரதமர் அறிவித்தார். பிறகு அதே ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி, மக்கள் நிதி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
சாதாரண மக்களுக்கும் வங்கி கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற போன்ற நிதி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் ஆண்டில் 7.5 கோடி கணக்குகளை இலக்காகக் கொண்டு திட்டம் தொடங்கப் பட்டு, 5 வாரங்களில் 5 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இது இந்த திட்டத்துக்கு கிடைத்த மக்கள் ஆதரவை எடுத்துக் காட்டியது.
முதலில் நான்கு ஆண்டுகள் வரை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 4 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த ஜன் தன் யோஜனா திட்டத்துக்குக் காலவரையற்ற நீட்டிப்பு வழங்கப்பட்டது.
ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கி வெற்றிகரமாக பத்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில், இத் திட்டத்தின்கீழ் இதுவரை 53 கோடி முறையான வங்கி கணக்குகள் தொடங்கப் பட்டிருக்கின்றன. இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தின் மக்கள் தொகைக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தால் 29.56 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர் . சொல்லப்போனால் இது ரஷ்ய மக்கள் தொகையின் இரு மடங்காகும். ஜன் தன் யோஜனா திட்டத்தால் 2.3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 99.97 சதவீத குடும்பங்கள் இப்போது இந்த திட்டத்தின் மூலம் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயம், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு அரசு மானியங்கள் நொடிப் பொழுதில் நேரடியாக மக்களின் கணக்குகளில் சென்று சேர்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த திட்டத்தின் வெற்றி என்பது மக்கள் இயக்கத்தின் விளைவாகும் என்று தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம், தங்கள் சேமிப்பு அதிகரித்துள்ளதாகவும், தங்கள் தேவைகளுக்காக வங்கிகளில் கடன் பெறுவது சுலபமாக இருப்பதாகவும் மக்கள் பெருமையாக சொல்வதைக் கேட்க முடிகிறது.
மேலும், ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் நிதி சேவைகளுக்கான பாலின இடைவெளி, சமூகத்தில் குற்ற விகிதங்கள், மது மற்றும் புகையிலை நுகர்வு கணிசமாக குறைந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் தொடங்கப் பட்ட இந்த மக்கள் நிதி திட்டம் இந்தியாவின் புரட்சிகரமான நிதி சேமிப்பு திட்டம் என்று போற்றப்படுகிறது.