ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கை மலையாள திரையுலகில் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை 4 நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரை உலகத்த பார்த்து தமிழ் சினிமாக்காரங்க பாடம் கத்துகணும், அங்க எப்படி படம் எடுக்குறாங்க பாருங்க? கொரோனாவுக்கு பிறகு OTT-அ சரியா பயன்படுத்துனது மலையாள சினிமாதான், அவங்களோட MAKING-ம் சரி, SUBJECT-ம் சரி வேற லெவல்ல இருக்கு…
இப்படி கேரள சினிமா குறித்து சிலாகித்து பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது ஹேமா ஆணையத்தின் அறிக்கை. 2017-ஆம் ஆண்டு மலையாள திரை உலகைச் சேர்ந்த பிரபல நடிகை ஓடும் காரில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். அதுதொடர்பான வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து மல்லுவுட்டில் பெண்களின் நிலை குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா, நடிகை சாரதா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வல்சலா குமாரி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
2019-ஆம் ஆண்டின் இறுதியில் தமது அறிக்கையை கேரள அரசிடம் சமர்பித்தது விசாரணைக் குழு. எனினும் 4 ஆண்டுகளுக்கு மேலாக அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இருந்ததன் காரணமாகவே கேரள அரசு அறிக்கையை வெளியிடாமல் இருந்ததோ என்று எண்ணுமளவுக்கு பல அணுகுண்டுகள் அதில் இருக்கின்றன.
சினிமாவை தேர்வுசெய்யும் பெண்கள் எல்லாவற்றும் ரெடியாக இருப்பார்கள், அவர்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்ற எண்ணம் மலையாள திரையுலகைச் சேர்ந்த பல ஆண்களுக்கு இருப்பதாகக் கூறுகிறது விசாரணை அறிக்கை.
வாய்ப்புக் கேட்டு வரும் பெண்களிடம் COMPROMISE மற்றும் ADJUSTMENT ஆகிய சொற்கள்தான் முதலில் சொல்லப்படுமாம். பாலியல் தேவைகளை நிறைவேற்றினால் மட்டுமே வாய்ப்புக் கிடைக்கும் என்றும், அவ்வாறு செய்ததால்தான் இன்றைக்கு பல நடிகைகள் முன்னணியில் இருப்பதாகவும் கூறுவார்களாம்.
பணத்துக்காகவும் புகழுக்காகவும் பெண்கள் எதை வேண்டுமானாலும் விட்டுத்தருவார்கள் என்ற நினைப்பு மலையாள திரையுலகைச் சேர்ந்த ஆண்களிடம் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக பெண்கள் சினிமாவுக்குள் வருவதில்லை என்றும், பணத்துக்காக மட்டுமே அவர்கள் வருவதாகவும் மல்லுவுட்டில் இருக்கும் பல ஆண்கள் நம்பவதாக கூறப்பட்டுள்ளது.
முதல் வாய்ப்பில் மட்டுமின்றி பல படங்களில் நடித்த பிறகும்கூட நடிகைகளை நிம்மதியாக இருக்க விட மாட்டார்களாம். வெளிப்புற படப்பிடிப்பின் போது இரவு நேரங்களில் மது போதையில் வந்து நடிகை தங்கியிருக்கும் அறைக்கதவை தட்டுவார்களாம். அதுவும் எப்படி…? கதவே உடையும் அளவுக்கு…
இதுபோன்ற காரணங்களால் பெரும்பாலும் படப்பிடிப்புக்குச் செல்லும் போது பெற்றோரையோ, உறவினர்களையோ தங்களது பாதுகாப்புக்காக நடிகைகள் அழைத்துச் செல்வதாக கூறுகிறது நீதிபதி ஹேமா ஆணையத்தின் அறிக்கை.
இத்தகைய கொடுமைகளை வெளியில் சொல்லும் நடிகைகளுக்கு அடுத்து யாரும் வாய்ப்புத் தரமாட்டார்களாம். மேலும் ரசிகர் மன்றம் என்ற பெயரில் இயங்கும் சிலர், குறிப்பிட்ட நடிகைகளைப் பற்றி பொய்ச் செய்திகளை பரப்பி அவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பார்களாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்களுக்கு ஒருவரே ரசிகர் மன்றங்களையும் வைத்திருப்பதாகவும் பணம் வாங்கிக்கொண்டு நடிகைகளைப் பற்றி அவதூறு பரப்புவதே அவரைப் போன்றவர்களின் வேலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கதாநாயகியாக நடிப்பவருக்கே இப்படி என்றால் துணை நடிகைகள் மற்றும் நடன மங்கைகளின் நிலையைப் பற்றி கேட்கவா வேண்டும்? அவர்களுக்கு உணவு, ஊதியம், கழிவறை வசதி என எதுவும் முறையாக கிடைக்காதாம். உழைப்பை சுரண்டுவதுடன் பாலியல் தொல்லையும் கொடுத்து பாடாய்படுத்துவார்களாம்.
நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பைனான்சியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு சிறு குழு மலையாள திரையுலகை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும், அவர்களை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது என்றும் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் மலையாள திரையுலகை புரட்டிப்போட்டுள்ள நிலையில், முன்னணி நடிகர் மற்றும் இயக்குநர் மீது வெளிப்டையாகவே வெடித்தன பாலியல் புகார்கள்.
பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமியின் தலைவருமான ரஞ்சித் மீது மேற்குவங்கத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியதை அடுத்து அவர் பதவி விலகியிருக்கிறார். இதே போல் மற்றொரு நடிகை கேரள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சித்திக் மீது குற்றம்சாட்டிய நிலையில் அவரும் ராஜினாமா செய்துள்ளார்.
அதே நடிகை தமிழ் திரைப்பட நடிகர் ரியாஸ்கான் மீதும் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர்கள் முகேஷ், IDAVELLA BABU, MANIYANPILLA RAJU, ஜெயசூர்யா ஆகியோர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றுமொரு நடிகை புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க நடிகைகள் தெரிவித்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க ஐ.ஜி. தலைமையில் சிறப்பு குழுவை அமைத்திருக்கிறது கேரள அரசு. ஹேமா ஆணையம் கொடுத்த அறிக்கையில் பலர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்ததாவும் அந்த பக்கங்களை அரசு நீக்கிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில் இந்த சிறப்பு குழுவால் மட்டும் என்ன பயன் கிடைத்தவிடப்போகிறது என்ற கேள்வியுடன் மல்லுவுட்டைச் சேர்ந்த சிலர் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.