இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளில் குழந்தை திருமணம் நடப்பதாக அமெரிக்காவின் பல்வேறு அமைப்புகள் அறிக்கை வெளியிடுவது வழக்கம். ஆனால், சர்வதேச அளவில் மனித உரிமைகளின் பாதுகாவலனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் தான் அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வலுக்கட்டாய குழந்தை திருமணங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக தொடர்ந்து போராடி வரும் ஒரு தன்னார்வ அமைப்பு தான் Unchained At Last என்ற அமைப்பு.
அண்மையில், இந்த அமைப்பு நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் 2000 மற்றும் 2018 ஆண்டுகளுக்கு இடையில் 3 லட்சம் குழந்தை திருமணம் நடந்த்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இந்த திருமணங்களில் 60,000 பெண் குழந்தைகள் தன்னை விட, மிக அதிக வயதுடைய ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இந்த 60,000 திருமணங்களில் 88 சதவீதம், திருமண விதிவிலக்கு என சட்டப்பூர்வ பாலியல் வன்கொடுமைக்கு அம்மாகாண சட்டங்கள் அனுமதிக்கின்றன.
அமெரிக்காவின் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் கூட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பாலியல் உறவை தடைசெய்கிறது. எனினும், பெண் குழந்தையைத் திருமணம் செய்தவர்களுக்கு சிறப்பாக விதிவிலக்கு அளிக்கிறது. அதாவது, குழந்தை திருமணங்கள் சட்டப்பூர்வமாக இருப்பதால், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு அமெரிக்க சட்டமே அனுமதிக்கின்றன.
மூடிய கதவுகளுக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்காத நிலையில், இதுபோன்ற திருமணங்கள் குழந்தைகளை பலாத்காரம் செய்ய வழிவகை செய்கின்றன. மேலும், எந்த மாகாணத்தில் சட்டம் அனுமதிக்கிறதோ அந்த மாகாணத்தில் பெண் குழந்தையை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்ளும் பழக்கமும் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது.
அதிக குழந்தை திருமணங்கள் நடந்த வரிசையில் டெக்சாஸ் மாகாணம் முதலிடத்தில் உள்ளது. கலிபோர்னியா, புளோரிடா, நெவாடா மற்றும் வட கரோலினா ஆகிய மாகாணங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியடையும் முன்பு நடத்தப்படும் குழந்தை திருமணம், கட்டாய திருமணம் போன்றவை 2017ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 50 மாகாணங்களில் சட்டப்பூர்வமாக இருந்தது.
2018ம் ஆண்டு சமோவா, 2020ம் ஆண்டு விர்ஜின் தீவு, பென்சில்வேனியா மற்றும் மினசோட்டா, 2021ம் ஆண்டு ரோட் தீவு மற்றும் நியூயார்க், 2022ம் ஆண்டு மசாசூசெட்ஸ், வெர்மான்ட், கனெக்டிகட், மற்றும் மெச்சிகன், 2023ம் ஆண்டு வாஷிங்டன், 2024 ஆம் ஆண்டு ஹாம்ப்ஷயர் ஆகிய மாகாணங்களில் இந்த குழந்தை திருமணத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
என்றாலும், இன்றும் அமெரிக்காவின் 37 மாகாணங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்னும் சட்டப்பூர்வமாக உள்ளது. குழந்தை திருமணத்தை ஒழிப்பதற்கான மசோதாக்கள் 12 மாநிலங்களில் நிலுவையில் உள்ளன.
குழந்தைத் திருமண அனுமதி சட்டத்தால் பெண் குழந்தைகள் அதிக பாலியல் வன்முறை சுரண்டல்களுக்கும் பொருளாதார சுரண்டல்களுக்கும் ஆளாகின்றனர்.
அமெரிக்காவில் 19 வயதிற்குள் திருமணம் செய்துகொள்ளும் இளம் பெண்களில் 50 சதவீத பேர் உயர்நிலைப்பள்ளி படிப்பை தொடரமுடியாமல் போகிறார்கள் என்றும், மேலும் 31 சதவீத இளம் பெண்கள் வறுமையில் வாடுகிறார்கள் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
குழந்தை திருமணம் என்பது வளரும் நாடுகளின் பிரச்சனை என்று கூறிவரும் நிலையில், இந்த ஆய்வறிக்கை , அமெரிக்காவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.
குழந்தை திருமணம், உடைந்துவரும் குடும்பங்கள், போதைப்பொருள் கலாச்சாரம், பாலின துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்முறைகள்,துப்பாக்கி கலாச்சாரம் போன்ற சமூக பிரச்சனைகளுக்கு முறையான சட்ட சீர்திருத்தத்தை அமெரிக்க கொண்டுவரவேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.