தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததால் மாற்று வினாத்தாள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பி.எட் இரண்டாம் ஆண்டு நான்காம் பருவ தேர்வு கடந்த 27ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை இரண்டு தேர்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், இன்று ‘படைப்பு திறனும் உள்ளடக்க கல்வியும்’ என்ற தேர்வு நடைபெறுகிறது.
70 மதிப்பெண்களுக்கு நடைபெற இருக்கும் இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே தேர்வர்களிடம் கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு தேர்வுகளுக்கான வினாத்தாளும் இதேபோல் முன்கூட்டியே வெளியிடப்பட்டு தேர்வுகள் முறைகேடாக நடைபெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தர் நியமிக்கப்படாமல் உள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் பதிவாளரும், தேர்வு கட்டுப்பாட்டாளரும் வினாத்தாளை விற்று முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மாற்று வினாத்தாள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பி.எட். தேர்வுக்காக ஏற்கெனவே அனுப்பிய வினாத்தாளை பயன்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.