தனது சிறுகதையையே வாழை எனும் பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாகவும் இதுதொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்றும் எழுத்தாளர் சோ.தர்மன் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், பொன்வேல், ராகுல், நிகிலா விமல் மற்றும் பலர் நடிப்பில் உருவான வாழை திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்துக்கு எதிர்பார்த்ததை விடவும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் வாழை திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகள் அனைத்தும் தனது நீர்ப்பழி சிறுகதை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்வு வாழையடி என்ற பெயரில் தான் சிறுகதை எழுதியுள்ளதாகவும் அந்த சிறுகதையே வாழை திரைப்படத்தின் காட்சிகளாக இடம் பெற்றுள்ளன எனவும் தெரிவித்தார். இக்கதையை பயன்படுத்த முறையாக யாரும் தன்னை தொடர்பு கொள்ளவோ, அனுமதி பெறவோ இல்லை என்றும் அவர் கறினார்.