பிரபல ஆப்பிள் நிறுவனம், தனது ஐபோன் 16 போன்கள் (iPhone 16 Series), ஆப்பிள் வாட்ச் (Apple Watch) , ஆப்பிள் ஏர்பாட் (AirPods) என புதிய ஆப்பிள் சாதனங்களை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக என்று தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐ-போன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலகச் சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான புதிய ஐபோன் மாடல்கள் வரும் செப்டம்பர் 20ம் தேதி முதல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் என தெரியவருகிறது.
செப்டம்பர் 10ம் தேதி நடக்கும் பிரம்மாண்ட அறிமுக விழாவில் ஐபோன் 16 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் தயாராகி வருகிறது என்றும், அதன்படி இந்த ஆண்டு ஐபோன் 16 (iPhone 16), ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus), ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) என நான்கு மாடல்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் புதிய ஐபோன்கள் அறிமுக நிகழ்வுக்கான நேரம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஐபோன் 16 மாடலை பொறுத்தவரையில், அதன் புரோ மாடல்களில் பெரிய திரை மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய கேமரா அம்சம் போன்றவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆப்பிள் போனில் பிரத்யேக AI அம்சமும் சேர்க்கப் பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 15 மாடலுடன் ஓப்பிடும் போது புதிய ஐபோன் 16 போனில் பெரிய வேறுபாடுகள் இருக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதோடு வாட்ச் சீரிஸ் 10 மாடல், ஏர்பாட் போன்றவையும் அறிமுகமாக இருப்பது ஐபோன் பிரியர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் ஐபோன் 16 வரிசையின் விலை விவரங்களும் Apple Hub பகிர்ந்த தகவலின்படி சமூக ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன.
அதன் படி, iPhone 16 அடிப்படை மாடல் இந்தியாவில் சுமார் 67,100 ரூபாயாகவும், பெரிய டிஸ்பிளேயுடன் கூடிய ஐபோன் 16 பிளஸ் 75,500 ரூபாயாகவும் ஆக இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இதுவே iPhone 16 Pro 256GB சுமார் 92,300 ரூபாயாகவும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அதே சேமிப்புத் திறனுக்கு சுமார் 1,00,700 ரூபாயாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் 16 அடிப்படை மாடல்களில் 256 GB மற்றும் 512 GB அளவில் சேமிப்புத் திறன் இருக்கும் என்றும், அதே நேரத்தில் ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் 512 GB மற்றும் 1 GB அளவில் சேமிப்புத் திறன் இருக்கும் என்றும் தெரியவருகிறது.
எப்படி பார்த்தாலும், முந்தைய ஐபோன்களைப் போலவே இந்த புதிய ஐபோன் மாடல்களுக்கான விலைகள் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.