அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்று நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதில், செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைப்பதற்காக அப்ளைடு சைட்டீரியல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் 250 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள செமி கண்டக்டர் ஆலையால் ஆயிரத்து 500 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அதிநவீன வளர்ச்சி மையமாக இந்த மையம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
செம்மஞ்சேரியில் மைக்ரோசிப் நிறுவனம் சார்பில் ஆலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், பேப்பால் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை எல்காட் வடபஞ்சியில் இன்பினிக்ஸ் நிறுவனம் சார்பில் தொழில்நுட்ப மையம் அமைய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும், 50 கோடி ரூபாய் மதிப்பில் அமையும் தொழில்நுட்ப மையத்தின் மூலம் 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சூலூரில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ஈல்ட் என்ஜினியரிங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.