நாட்டில் நிதியியல் தொழில்நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற சர்வதேச நிதி தொழில்நுட்ப விழாவில் பங்கேற்ற அவர், நமது கலாசார பன்முகத்தன்மையைப் பார்த்து உலக நாடுகள் வியந்த நிலையில், தற்போதைய நிதி தொழில்நுட்பத்தைக் கண்டு அவை பிரமித்து நிற்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் வந்து இறங்குவதிலிருந்து சாலையோரக் கடைகளில் உணவு பொருட்களை ருசிப்பது வரை இந்தியாவின் நிதியியல் தொழில்நுட்ப புரட்சியை எல்லா இடங்களிலும் காணலாம் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
முன்பெல்லாம் நாட்டில் போதிய அளவில் வங்கிக் கிளைகள் இல்லை என்றும், கிராமப்புறங்களில் இணைய சேவை கிடைப்பது இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதை நினைவுகூர்ந்த அவர்,
நிதி தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக 6 கோடியாக இருந்த பண்பலை பயனாளிகளின் எண்ணிக்கை தற்போது 94 கோடியாக அதிகரித்திருப்பதாக கூறினார்.
ஜன் தன் வங்கிக் கணக்கு மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளுடன் இணைக்கப்பட்டு, 10 கோடி பெண்கள் பயன்பெறுவதாகவும், பெண்கள் நிதி அதிகாரம் பெற ஜன் தன் திட்டம் அடித்தளம் அமைத்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் நிதி தொழில்நுட்ப தொழில் துறையில் 31 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டதாக கூறிய பிரதமர் மோடி, இந்தத் துறையில் புத்தாக்க நிறுவனங்கள் 500 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.