அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சச்சிதானந்தத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தென் தமிழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த 24, 25ஆம் தேதிகளில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர்.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், பழனி மலைக்கோவில் கருவறை பின்புறம் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தியதாக கூறினார்.
இந்நிலையில், பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தென் தமிழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், எவ்வித ஆதாரமும் இல்லாமல் இரு மதத்தினர் இடையே மனக்கசப்பை உருவாக்கும் வகையில் எம்.பி சச்சிதானந்தம் பேசியதாக தெரிவித்தார்.
மாற்று மதத்தினர்கள் கோயில் கொடி மரத்தை தாண்டி செல்ல அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், எம்.பி சச்சிதானந்தம் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.