உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் பங்களாதேஷ் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா .சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,வருகின்ற ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டும் விழா சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு சிறிய விநாயகர் சிலைகள் வீடுகளில் வைத்து வழிபட்டனர். இந்த ஆண்டும் அந்த எழுச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் வைத்து வழிபாடு மேற்கொள்ளப்பட்டது நடபாண்டில் அதனையும் தாண்டி விநாயகர் சிலைகள் வீடுகளில் பூஜை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.
ஆந்திர முதலமைச்சர் மதம் மாற்ற தடை சட்டம் கொண்டு வந்துள்ளார். இதனை இந்து முன்னணி வரவேற்கிறது. தமிழகத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தொல்லை கொடுத்து வருகிறது. இருப்பினும் விழா எழுச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.