விண்வெளிப் பயணத்தில் சாதனை புரிந்து ஹீரோக்களாக திரும்பி வந்தவர்களும் உண்டு. எதிர்பாராத சூழலால் ஒரு சிலர் தங்கள் உயிரையே அறிவியல் ஆராய்ச்சிக்கு விலையாக கொடுத்துள்ளனர். விண்வெளியில் இருந்து உயிருடன் பூமிக்கு திரும்பாத விண்வெளி வீரர்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான சவாலும் கூட என்பதில் சந்தேகமில்லை.
1960ம் ஆண்டிலிருந்து விண்வெளி ஆய்வின் வரலாறு தொடங்குகிறது. எண்ணற்ற விண்வெளி வீரர்கள் தங்கள் விலை மதிப்பில்லாத உயிரைப் பணயம் வைத்து, அறிவியல் வளர்ச்சிக்காக விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 676 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அவர்களில், 20 பேர் விண்ணிலேயே இறந்துள்ளனர். இது விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட மொத்த வீரர்களில் 2.8 சதவீதமாகும்.
1967ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி, விண்வெளிப் பயணத்துக்கு முந்தைய சோதனையின் போதே விண்வெளி ஓடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விண்வெளியில் பறந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரரான கஸ் கிரிஸ்ஸம், விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரரான எட்வர்ட் எச். வைட் மற்றும் ரோஜர் பி. சாஃபி ஆகிய 3 விண்வெளி வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1967ம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, சோயுஸ் 1 விண்கலத்தில் ரஷ்ய விண்வெளி வீரர் விளாடிமிர் கோமரோவ் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக மீண்டும் பூமிக்குள் நுழையும் போது, பாராசூட் அமைப்பு தோல்வியடைந்தது. இதனால், விளாடிமிர் கோமரோவ் விண்வெளி பயணத்தின் போது இறந்த முதல் விண்வெளி வீரர் ஆனார்.
அடுத்ததாக, 1971ம் ஆண்டு சோயுஸ் 11 மூலம் , உலகின் முதல் விண்வெளி நிலையமான சல்யுட் 1 லிருந்து விண்வெளி வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். தரையிறங்குவதற்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக விண்கலத்தில் இருந்த 3 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். இதுவே விண்வெளியில் இருக்கும் போது விண்வெளி வீரர்கள் இறந்த முதல் சம்பவமாகும்.
1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி அன்று காலை 11:38 மணிக்கு அமெரிக்க விண்வெளி ஓடமான சேலஞ்சர் விண்ணில் செலுத்தப் பட்டது. செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சரியாக 73 வினாடிகளில் வெடித்து சிதறியது. இந்த மிக மோசமான விபத்தில், விண்வெளிக்கு சென்ற முதல் குடிமகனான ஆசிரியை கிறிஸ்டா மெக்அலிஃப் உட்பட 7 விண்வெளி வீரர்கள் மரணமடைந்தனர்.
கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப் பெற்றவர். 2003ம் ஆண்டு, பிப்ரவரி 1 ஆம் தேதி, ‘கொலம்பியா’ என்ற விண்வெளி ஓடம் 15 நாட்கள் விண்வெளியில் பயணித்து, பூமிக்குத் திரும்பியது. கொலம்பியா விண்வெளி ஓடம் பழுதான காரணத்தால், அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா, இஸ்ரேலின் முதல் விண்வெளி வீரர் உட்பட 7 வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த ஜூன் 6ம் தேதி, போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் கேப்சூலில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ்எக்ஸ் வாகனம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
இதனால் எட்டுநாள் பணிக்காக விண்வெளிக்குச் சென்றவர்கள் எட்டு மாதங்கள் விண்வெளியில் செலவிட வேண்டிய ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.