பாரா ஒலிம்பிக்கில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் போட்டியின் 5-வது நாளான நேற்று நடைபெற்ற ஆடவருக்கான உயரம் தாண்டுதல் – T47 இறுதிப் போட்டியில், இந்தியாவின் நிஷாத் குமார் 2 புள்ளி 04 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
அதனைத்தொடர்ந்து, பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில், இந்திய வீராங்கனை பிரீத்தி பால் 30 புள்ளி 01 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கத்தை கைபற்றினார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்நிலையில், ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.