நீட் மறு தோ்வு நடத்தக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டு மே 5-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்தத் தோ்வை ரத்து செய்துவிட்டு மறு தோ்வு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, ‘வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல சா்ச்சைகளில் சிக்கியபோதும், தோ்வின் முழுமையாக பாதிக்கப்படாத காரணத்தால் அத்தோ்வை ரத்து செய்ய வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தீா்ப்பு வழங்கி, மறு தோ்வு நடத்தக் கோரிய மனுக்களை நிராகரித்தது.
மேலும், உரிய வழிகாட்டு நடைமுறையை வகுக்க மத்திய அரசு சாா்பில் அமைக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியது.
வரும் 30-ஆம் தேதி ராதாகிருஷ்ணன் குழு, அதன் அறிக்கையை சமா்ப்பிக்கவுள்ள நிலையில், இந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் காஜல் குமாரி என்பவா் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளாா்.