சரக்கு, சேவை வரியிலிருந்து மருத்துவக் காப்பீட்டுக்கு விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு தற்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதை மறுபரீசிலனை செய்யக் கோரி பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்குமாறு மத்திய, மாநில வருவாய்த் துறை அதிகாரிகளை கொண்ட ஃபிட்மென்ட் கமிட்டி, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்தது.
அந்த வகையில், மருத்துவக் காப்பீட்டுக்கு வரிவிலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் வரும் 9-ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின்போது அதன் மீது முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை மருத்துவக் காப்பீட்டுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டால், மத்திய அரசின் கருவூலத்துக்கு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம் என மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.