உள்ளாட்சி அமைப்புகளில் நிலவும் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையால் சென்னை மாநகரமே சிமெண்டு காடாக மாறிவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை நீலாங்கரை பகுதியில் திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ள விதிமீறல் பகுதியை இடிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என வடிவேலு, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற விதிமீறல் கட்டடங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், உள்ளாட்சி துறை அதிகாரிகளின் மிகப்பெரிய ஊழல் நடவடிக்கையால், சென்னை மாநகரமே சிமெண்ட் காடாக மாறிவிட்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை 2 மாதத்துக்குள் எடுக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தனர்.