உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உட்பட 10 பேரை தாக்கிக் கொன்ற ஓநாய்களை கண்டதும் சுட வனத்துறையினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பஹ்ராச் (Bahraich), லக்கிம்பூர் கெரி, மொராதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களின் வனப் பகுதியையொட்டிய கிராமங்களுக்குள் இரவு நேரங்களில் நுழையும் ஓநாய்கள், கால்நடைகளையும், மனிதர்களையும் வேட்டையாடுவது தொடர்வதால், கிராம மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து இதுவரை 10 பேரை ஓநாய்கள் தாக்கிக் கொன்றன. இதில் 9 பேர் 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள். மனிதர்களை காவு வாங்கிய 6 ஓநாய்களில் நான்கை வனத்துறையினர் பிடித்து விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகளை நேரில் கண்காணிக்குமாறு வனத்துறை மூத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
மீட்புப் பணி தோல்வியடைந்தால் ஓநாய்களை சுடவும் உத்தரவிட்டார். மேலும், மனிதர்கள் – விலங்குகள் இடையே நடக்கும் மோதலுக்கான அடிப்படை காரணத்தை ஆராயுமாறும் வனத்துறைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தினார்.