தமிழகத்தில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கூறியுள்ளதாவது : நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட 6-வது வார்டு அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சமூக விரோதிகள் புகுந்து பள்ளி சுவற்றிலும், சமையலறையின் பூட்டிலும், மனித கழிவை பூசி அட்டூழியம் செய்துள்ளனர். மனித கழிவால் ஆபாச வார்த்தைகளை எழுதி வைத்துள்ளனர்.அந்த பள்ளியின் சுற்றுச்சுவர் உயரம் குறைவாகவும், பல இடங்களில் இடிந்தும் உள்ளதால், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து தகாத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். பள்ளிகளிலும் பொது இடங்களிலும் இதுபோன்ற அருவெறுக்கத்தக்க வகையில் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீர்தேக்க தொட்டியில் சமூக விரோதிகள் மலம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து பேராட்டங்கள் நடத்தியுள்ளன. ஆனால் 600 நாட்களை கடந்த பின்னரும் இந்த வழக்கில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் வேண்டுமென்றே இந்த வழக்கு தாமதம் செய்யப்பட்டு வருகிறது இதுபோலவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாயிற்கதவில் மனித கழிவு பூசப்பட்ட சம்பவம் நடந்தது. இதுபற்றி எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தொட்டியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துர்நாற்றம் வீசியதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர் ஆனால் இதனை விசாரணை செய்து உண்மையை கண்டறியவில்லை. மாறாக சம்பவத்தையே மறைத்து விட்டனர். இந்த சம்பவம் நடந்த பிறகுமேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே காவேரிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில் மனிதக் கழிவை பூசி மர்ம நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவாண்டான்தெருவில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த சம்பவம் நடந்தது. அதிகாரிகளை வைத்து தொட்டியில் பாசி பிடித்ததால் துர்நாற்றம் வீசியதாக சம்பவத்தை வழக்கம்போல் திசை திருப்பும் வேலையில் திமுக அரசு இறங்கியுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையே சுட்டிக்காட்டி கண்டித்தது. தமிழ்நாடு முழுவதும் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளி வந்துள்ளன.
தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கல்வி எனும் அறிவு தீபத்தை ஏற்றும் பள்ளிகளில் மலம் பூசும் அவலங்கள் அத்தடுத்து அரங்கேறி வருகின்றன.
உலகின் பல பகுதிகளில் இல்லாத இந்த மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது திமுகவினர் திராவிட பெருமை பேசும் தமிழகத்தில் தான் என்பது வேதனையான ஒன்று தமிழகத்தின் பலப்பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது அரசு பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், இரவுக் காவலாளி இல்லாததால் மது அருந்துவோரின் கூடாரமாக பள்ளிகள் மாறி வருகின்றன. பள்ளிகளில் உரிய சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.
அரசு பள்ளிகளில் தேவையான குறைந்தபட்ச உட்கட்டமைப்புகள் இல்லாததால் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதை பற்றி எந்த கவலையும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் சாதனை ஆட்சி நடத்துவதாக தற்பெருமை பேசும் திமுகவும், முதலமைச்சரும் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமான செயல். பள்ளி சுவற்றிலும் பள்ளி சமையலறை பகுதியிலும் மனித கழிவு பூசப்பட்ட செய்தி அதிர்ச்சியோடு பெரும் அருவெறுப்பை ஏற்படுத்துகிறது.நாகரிகமற்ற இச்செயலை கண்டிப்பதோடு, இத்தகைய சமூக விரோத வன்மையாகக் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி உரிய தண்டனை வாங்கித் தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.