தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு தாய் பல்கலைக்கழகமாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று. நாட்டை கட்டியமைக்கும் பணியில் மைல்கல்லாக திகழ்ந்து வரும் சென்னைப் பல்கலைக்கழகம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இன்றைய தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் என பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய அன்றைய சென்னை மாகாண மாணவர்களின் உயர்கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த 1857ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி தொடங்கப்பட்டது தான் இந்த சென்னைப் பல்கலைக்கழகம். ஏராளமான கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் என பல வல்லுநர்களை அடையாளம் காட்டிய சென்னைப் பல்கலைக்கழகம் உருவான தினம் இன்று..
துறைரீதியான படிப்புகளுக்கு தனித்தனியாக பல்கலைக்கழகங்கள் தற்போது இருக்கும் நிலையில், முன்பு மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பல்கலைக்கழகமாக சென்னைப் பல்கலைக்கழகம் ஒன்று மட்டுமே திகழ்ந்தது.
தமிழகத்தில் பல்கலைக்கழகம் என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருவது சென்னைப் பல்கலைக்கழகம் தான் என்று பெருமிதம் பொங்க கூறுகிறார் அதன் முன்னாள் மாணவரும, இந்நாள் பேராசிரியருமான ஜெய் சக்திவேல்.
டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன், கே.ஆர்.நாராயணன் உட்பட ஆறு குடியரசுத் தலைவர்கள், நோல்பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன், இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.சுப்பாராவ், என எண்ணற்ற அறிஞர்களையும், ஆட்சியாளர்களையும் உருவாக்கிய பெருமையை கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இன்றளவும் தரமான கல்வி கிடைப்பதாக கூறுகிறார் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையின் ஆராய்ச்சி மாணவர் தீப்தி
121 இணைப்புக் கல்லூரிகள், சேப்பாக்கம், கிண்டி, மெரினா, தரமணி, சேத்துப்பட்டு என் ஐந்து வளாகங்கள், 32 துறைகள் என நூற்றாண்டுகளை கடந்தும் சென்னைப் பல்கலைக்கழகம் தனித்துவமிக்கதாக திகழ்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகம், புத்தக விரும்பிகளுக்கு மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மாணவர்களின் அறிவுசார் தேடல்களுக்கும் துணையாக இருக்கிறது.
சமூகநீதி அடிப்படையில் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக திகழும் சென்னைப் பல்கலைக்கழகம், எதிர்கால இளைய சமுதாயத்தின் வழிகாட்டியாகவும் திகழ்ந்து வருகிறது.