திருநெல்வேலி மாவட்டத்தில் நலிந்து வரும் கோரைப் பாய் உற்பத்தியை மீட்டெடுக்கவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென, பாய் உற்பத்தி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரைப் புற்களால் தயாரிக்கப்படும் பாய்கள், உடல் சூட்டை தணித்து, நிம்மதியான உறக்கத்தைத் தரவல்லது. இதனால் கோரைப் புற்களால் தயாரிக்கப்பட்ட பாய் வகைகளையே, வீடுகளில், முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட பத்தமடை, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளில், பாய் தயாரிப்பு, முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பாய்களுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்த பகுதிகளில் பாய் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், இதற்காக கோரைப் புற்களை 6 மாத காலம் வளர்க்கின்றனர். பின்னர் அறுவடை செய்து, தரம் பிரித்து, 3 நாட்கள் வரை தண்ணீரில் நன்கு ஊற வைக்கின்றனர்.
அதன் பிறகு, கோரைப் புற்களின் மேலுள்ள தேவையில்லாத பக்கக் கதிர்களை அகற்றி, வெயிலில் உலர்த்துகின்றனர். பிறகு பல்வேறு நிறங்களைச் சேர்த்து, அடுப்பில் நீருடன் வேக வைத்து , மீண்டும் காய வைத்து, பல அளவுகளில், பல்வேறு வகையான பாய்களை தயாரிக்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு செயல்முறைகளுக்குப் பின் உருவாக்கப்படும் கோரைப் பாய் தயாரிப்பு தொழில், முன்புபோல் இல்லையென்று தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாகரீக வளர்ச்சியால் பிளாஸ்டிக் பாய்கள், பஞ்சு மெத்தை உள்ளிட்டவற்றை பயன்படுத்தத் தொடங்கியதால், பாரம்பரியமிக்க கோரைப் பாய் தயாரிப்பு தொழில் நலிவடைந்து வருவதாகவும், இதனால் வருவாய் குறைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த 1955ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வீரவநல்லூர் பாய் நெசவாளர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் தற்போது வெறும் 20 குடும்பத்தினர் மட்டுமே பாய் நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களைத் தவிர 40 குடும்பத்தினர், தங்கள் வீடுகளில் பாய்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். பாய் உற்பத்தி தொழில் மெல்ல மெல்ல நலிவடைந்து வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.