செயற்கைக்கோள் இணைய நிறுவனமான Starlink -ன் வங்கி கணக்குகளையும் சொத்துக்களையும் பிரேசில் உச்சநீதிமன்றம் முடக்கியதால், சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய நபரான எலான் மஸ்க் தனது தோல்வியை முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
எக்ஸ் தளத்தில் போலி செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதாகவும், போலி கணக்குகளைத் தடுக்க தவறியதாகவும் எக்ஸ் தளத்தின் நிறுவனர் எலான் மஸ்க் மீது பல்வேறு குற்றஞ்சாட்டுக்கள் பல்வேறு நாடுகளில் எழுந்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்தில் சில போலி தகவல்கள் பரவியதால் ஒரு சில குறிப்பிட்ட கணக்குகளை முடக்க வேண்டும் என பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக எலான் மஸ்க், ஜனநாயக கொள்கையின் அடிப்படையில் இயங்கும் கணக்குகளை முடக்குவது, கருத்து சுதந்திரத்துக்குத் தடையாக மாறும் என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக,எலான் மஸ்க்க்கும், பிரேசில் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் தொடங்கியது.
போலி கணக்குகள் மற்றும் வெறுப்பு பேச்சுகளை தடுக்க, பிரேசில் உச்ச நீதிமன்றம் பலமுறை எச்சரித்த போதிலும், நீதிமன்ற உத்தரவை எலான் மஸ்க் பின்பற்றவில்லை.
ஒரு கட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்துக்கென்று பிரேசிலில் ஒரு சட்டப் பிரதிநிதியை நியமிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எலான் மஸ்க் நீதிமன்ற உத்தரவு படி சட்டப் பிரதிநிதியை நியமிக்கவுமில்லை.
பிரேசிலின் சட்டத்தை மஸ்க் மதிக்கவில்லை என்று கூறி, பிரேசில் நாட்டில் ‘எக்ஸ்’ தளத்துக்குப் அந்நாட்டு உச்சநீதிமன்றம் தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டது.
மேலும், மஸ்க்கின் செயற்கைக்கோள் இணைய நிறுவனமான Starlink -ன் நிதிச் சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் முடக்கிய பிரேசில் உச்ச நீதிமன்றம், எக்ஸ் நிறுவனத்துக்கு 18.5 மில்லியன்அமெரிக்க டாலர் அபராதமும் விதித்தது .கூடுதலாக Starlink நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவதையோ பெறுவதையோ தடுக்கவும் பிரேசில் மத்திய வங்கிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட சொத்துகளின் பட்டியலில் கார்கள், ரியல் எஸ்டேட், படகுகள் மற்றும் விமானங்களுடன் Starlink Brazil Holding Ltda மற்றும் Starlink Brazil Servicos de Internet Ltda ஆகியவற்றின் வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிச் சொத்துக்கள் அடங்கும் என்று தெரிய வருகிறது.
இந்த அபராதத்தை செலுத்தும் வரை பிரேசில் ‘எக்ஸ்’ தளம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஸ்டார்லிங்க் பிரேசிலில் சுமார் 2 லட்சத்து 25,000 பிராட்பேண்ட் இணைய ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை எக்ஸ் மற்றும் ஸ்டார் லிங்க் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் வைத்திருந்தார்.
இந்நிலையில், எதிர்பாராத திருப்பமாக , Starlink சொத்துக்களை முடக்குவதில் பிரேசில் சட்டவிரோதமாக நடந்து கொண்டாலும், பிரேசிலில் X தளத்தைத் தடை செய்யும் உத்தரவை ஏற்றுக் கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
சீனா, ரஷ்யா, ஈரான், மியான்மர், வட கொரியா, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா ஆகிய நாடுகளும் எலான் மஸ்க் மீதே இதே குற்றச்சாட்டுக்களை ஏற்கெனவே எழுப்பிய போது கடுமையாக விமர்சனம் செய்த எலான் மஸ்க், பிரேசிலிடம் தலை வணங்கியுள்ளார்.
பிரேசிலில் தொடங்கி இருக்கும் எக்ஸ் தளத்துக்கான தடை பிற சமூக ஊடக தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது