தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்வில் மூட நம்பிக்கையை விதைக்கும் விதமாக ஒருவர் பேசி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிளை, மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது என சாடியுள்ள ராமதாஸ் மூடநம்பிக்கை பேச்சாளரின் நிகழ்ச்சிக்கு தாராளமாக செலவிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகளை நடத்த பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ் மாணவ, மாணவிகளின் மனதில் நஞ்சைக் கலக்கும் மனிதர்களை அழைத்து வந்து இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த விவகாரத்தை மூடி மறைக்காமல் நிகழ்ச்சிக்கு காரணமானவர்கள் எத்தகைய உயர் பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மூட நம்பிக்கைப் பேச்சாளரை கைது செய்ய வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.