சென்னை அசோக்நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீதான நடவடிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துளள பதிவில் கூறியுள்ளதாவது ; மிகத் தெளிவாக, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் தான் தன்னம்பிக்கைக்கான நிகழ்ச்சி மற்றும் பேச்சு அமைந்திருந்தது என்றும் மத ரீதியான கருத்துக்கள் எதுவுமே சொல்லப்படவில்லை என்கிறார் சென்னை அஷோக்நகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை.
ஆனால், யாரோ சிலரின் சமூக ஊடக பதிவுகளின் அடிப்படையில் பயந்து கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் அவசர கதியில் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுத்திருப்பது நகைப்புக்குரியது மட்டுமல்ல, கண்டிக்கதக்கதும் கூட.
ஆன்மீகமும் அறிவியல் தான் என்பதை அறியாமல் பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து விரோத சிந்தனையை விதைக்கும் தீய சக்திகளுக்கு துணை போகிறது தமிழக அரசு. மாணவிகளின் தன்னம்பிக்கையை தகர்க்கும் விதத்தில் எடுக்கப்பட்ட தலைமை ஆசிரியையின் மீதான நடவடிக்கையை அரசு திரும்பப்பெற வேண்டும் என நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.