உத்தரபிரதேசத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஓநாய்களின் தாக்குதல்களால் 7 குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை குறி வைத்து ஒநாய்கள் தாக்குவது ஏன்? என்பது பற்றி விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு..
1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில், உத்தரப்பிரதேசத்தில் ஜான்பூர், பிரதாப்கர், சுல்தான்பூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓநாய்கள் சுமார் 42 குழந்தைகளைக் கொன்றன.
2003ம் ஆண்டில், ஆறு மாத கால இடைவெளியில் பல்ராம்பூரில் ஓநாய்கள் 10 குழந்தைகளைக்கொன்றன. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் கூட்டம் கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த சில வாரங்களாக ஏழு குழந்தைகள் உட்பட பலர் ஓநாய்களால் உயிரிழந்துள்ளனர். இதுவரை நான்கு ஒநாய்கள் பிடிக்கப்பட்ட நிலையில், 2 ஒநாய்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஓநாய்கள் ஏன் மனிதர்களை குறிப்பாக குழந்தைகளை வேட்டையாடுகின்றன என்பதற்கு விஞ்ஞானிகள் பல காரணங்களை கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக ஓநாய்கள் மனிதர்களைத் தாக்குவதில்லை. பெரும்பாலும் ஓநாய்கள் வனப் பகுதிகளில் உள்ள செம்மறி ஆடுகள், மான்கள், முயல்கள், எலிகள் மற்றும் பிற சிறிய உயிரினங்களை வேட்டையாடுகின்றன.
மழைக்காலத்தில், பசுமையான தாவரங்களுக்கு மத்தியில் முயல்கள் மற்றும் பிற சிறிய விலங்குகள் ஒளிந்து கொள்வது எளிதாகிறது.
மேலும் மழையின் காரணமாக, ஓநாய்களின் குகைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அவற்றுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், ஓநாய்கள் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு படையெடுத்து மனிதர்களைக் கொன்று தம் பசியைப் போக்கிக் கொள்கின்றன என்று கூறப்படுகிறது.
பொதுவாக, கர்ப்பமான நேரத்திலும் குட்டிகளை ஈன்ற நேரத்திலும் பெண் ஓநாய்களுக்கு அதிக உணவு தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். எனவே, பெண் ஓநாய் அல்லது குட்டிகள் வேட்டையாட முடியாது என்பதால், ஆண் ஓநாய் உணவு தேடி வெளியே செல்கிறது.
உடலில் ஒரு சிறிய கீறல் ஏற்பட்டாலும் ரத்தம் வரும் ஒரே இனம் மனித இனம் தான் என்பதால் ஓநாய்களுக்கு, குழந்தைகள் மிக எளிதாக கிடைக்கும் உணவாக அமைந்து விடுகின்றன. எனவே முதலில் குழந்தைகளையே ஓநாய்கள் கொல்கின்றன
ஒரு குழந்தையைக் கொன்ற பிறகு, பசித்த ஆண் ஓநாய்க்கு எவ்வளவு இறைச்சி தேவையோ அதற்கு இருமடங்கு சாப்பிட்டு, பின் திரும்பிச் சென்று பெண் ஓநாய் மற்றும் குட்டிகளுக்கு முன்பாக வாந்தி எடுக்கும். அந்த இறைச்சியைப் பெண் ஓநாய் மற்றும் குட்டிகள் சாப்பிடுகின்றன.
ஒருமுறை மனித இறைச்சியைச் சாப்பிட்டவுடன், அதற்கு அடிமையாகி, ஓநாய்கள் தொடர்ந்து குழந்தைகளை வேட்டையாடத் தொடங்குகின்றன.
இந்தியாவில் சுமார் 2,000 ஓநாய்கள் உள்ளன என்றும், 90 சதவீத ஓநாய்கள் காடுகளுக்கு வெளியே காணப்படுகின்றன என்றும், அவை சுமார் 250 சதுர கிலோமீட்டர் தூரம் வரை சென்று வேட்டையாடும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நாய்கள், ஓநாய்களிலிருந்து தோன்றியிருந்தாலும், குறுக்கு இனப்பெருக்கம் ஏற்படலாம் என்றாலும், இந்திய ஓநாய்கள், நாய்- ஓநாய் கலப்பினத்தில் வந்ததில்லை என்று பல வன விலங்கு ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
கிராமப்புற வாழ்வாதாரத்தை உயர்த்துவதும், கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளான, கதவுகள், மின்சாரம், கழிப்பறைகள் கொண்ட வீடுகளை வழங்குவதும் தான் ஓநாய்களின் தாக்குதலில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.