விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர்.
சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயிலில் கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று அதிகாலையே நடை திறக்கப்பட்டது.
பின்னர் சுவாமிக்கு புண்ணிய தீர்த்தங்களால் அபிஷேகம் நடத்தப்பட் நிலையில், சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மங்கல வாத்தியங்கள் முழங்க, கம்பீரமாக காட்சியளித்த விநாயகருக்கு தேங்காய், பழம், பூ, அருகம்புல் உள்ளிட்ட பொருட்கள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதே போல, திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏராளமானோர் வழிபட்டு வருகின்றனர். மேலும், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.
அப்போது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் கோயில் நடை
திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
அப்போது விநாயகப் பெருமானை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். . மேலும், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.