மதுரையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் தொடக்க விழாவில் பள்ளி மாணவிகள் சீருடையுடன் சாமியாடியது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் புத்தக கண்காட்சியின் துவக்க விழா நடைபெற்றது. அரசு நிகழ்ச்சி என்பதால் பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின்பேரில் அருகில் உள்ள காக்கை பாடினியார் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவியர் அழைத்து வரப்பட்டனர். தொடக்க விழாவில் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது பாடல் ஒலிக்கப்பட்டதை கேட்ட மாணவிகள் தங்களை மறந்து சாமியாட தொடங்கினர். இதைக் கண்ட ஆசிரியர்கள் அவர்களை அடக்க முயன்றனர். இருப்பினும் தொடர்ந்து மாணவிகள் சாமியாடியதால் அவர்களின் முகத்தில் தண்ணீரை தெளித்து ஆசிரியர்கள் சமாதானப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே பாடல் ஒலிபரப்பப்பட்டதாகவும், மாணவிகள் மகிழ்ச்சியாக ஆடியதால் தான் பாடல் தொடர்ந்து ஒலிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடலுக்கு ஆடிய மாணவிகள் யாரும் மயங்கவில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.