மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற அடிப்படையில் பாத பூஜை செய்வது நமது கலாச்சாரம் என்பதால், அதை அனுமதிக்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை OMR சாலை காரப்பாக்கத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
இன்றைய காலகட்டத்தில் ஆன்மிகம் இல்லாத அரசியல் இருக்காது. அரசியல் செய்யவும் முடியாது. அதனால் நேர்மறையான ஆன்மிக அரசியலை தமிழக அரசு முன்னெடுத்து செல்ல வேண்டும்.
பள்ளிக் கல்வித்துறை பொறுத்தவரை பல குழப்பங்களுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்.
சரியான வழிமுறை பள்ளிக் கல்வித்துறையில் இல்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்த மொழியை படிக்க கூடாது, அந்த மொழியை படிக்க கூடாது, புதிய கல்வி கொள்கையை ஆதரிக்க மாட்டோம், இந்தியை ஆதரிக்க மாட்டோம், வேறு மொழியை படிக்க மாட்டோம் இப்படி அரசியல் செய்து கொண்டிருப்பதை விட மாணவர்களுக்கு சரியான பாதை காண்பிக்க வேண்டும் என்பது எனது கருத்து.
ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்ததை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்று தாம் கூறியுள்ளார்.
அரசி பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசாங்கம் அனுமதிக்காமல் யாரையும் அழைக்க மாட்டார்கள். ஆசிரியர்களை பலிக்காடா ஆக்குகிரார்கள் என்பது எனது கருத்து. ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்வது மாணவர்களின் அக்கறைக்கு எதிரானது.
மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்கள் அனைவருக்கும் பாத பூஜை செய்யலாம். பாத பூஜை செய்வது நமது கலாச்சாரத்தில் ஒன்று இதை அனுமதிக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
மேலும் ஒரு கோடி பேர் உறுப்பினர் சேர்க்கைக்காக எனக்கு 11 மாவட்டங்கள் கொடுத்துள்ளனர். அதற்காக நான் கிருஷ்ணகிரி முதல் நீலகிரி வரை உறுப்பினர்கள் சேர்க்கைக்காக செல்கிறேன் என்றார்.