பசி பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைக் காப்பாற்ற வனவிலங்குகளை வேட்டையாடலாம் என்கிற முடிவை நமீபியா அரசு எடுத்திருக்கிறது. இதற்கான காரணம் என்ன? ஏன் இந்த நிலைமை என்பது பற்றி தற்போது பார்க்கலாம். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆப்பிரிக்கா கண்டத்தில் நான்காவது பெரிய நதியான ஜாம்பாசி நதியை ஒட்டியுள்ள நாடுகளுக்கு, கடந்த ஆண்டு தேவையான மழை பொழிவில் 20 சதவீதம் கூட கிடைக்கவில்லை.
தெற்கு ஆப்பிரிக்கா நாடான நமீபியா, கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது .
கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து, விவசாய நாடான நமீபியா மூன்று முறை வறட்சியால் அவசர நிலையை அறிவித்திருக்கிறது.
இந்த மோசமான நிலைமையில் இருந்து நமீபியா மீண்டு வருவதற்காக ஐநா 30 லட்சம் அமெரிக்க டாலர்களைக் கொடுத்திருக்கிறது.
நமீபியா அரசின் உணவு இருப்பில் 85 சதவீதத்துக்கும் மேல் காலியாகி விட்டது. இதனால் நமீபியாவில் பட்டினியால் குழந்தைகள் இறப்பதும், ஒரு வாய் தண்ணீருக்காக மக்கள் ஏங்குவதும் அன்றாட காட்சியாகி விட்டது.
2.5 மில்லியன் மக்கள் வாழும் நமீபியாவில் கூடிய விரைவில் பாதிக்கும் மேற்பட்டோர் கடுமையான பட்டினியால் உயிரிழக்க நேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க நமீபியா அரசு 83 யானைகள் உட்பட 700 க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளை கொல்ல இருப்பதாக தெரியவருகிறது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 300 வரிக்குதிரைகள், 30 நீர் யானைகள், 50 சிறுமான்கள், 60 காண்டாமிருகங்கள்,100 நீலக் காட்டுமான்கள் மற்றும் 100 மறிமான்கள் கொல்லப் பட இருப்பதாகவும் அதனால் சுமார் 63 டன் இறைச்சி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே, அரசின் நிவாரணத் திட்டத்திற்காக கொல்லப்பட்ட157 வனவிலங்குகளிலிருந்து 56,875 கிலோ இறைச்சி பெறப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
வறட்சியின் காரணமாக தண்ணீரைத் தேடி விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் வருமென்றும் அதனால் மக்களுக்கு ஆபத்து நேரும் என்றும் ,அதனாலேயே இந்த வனவிலங்கு அழிப்பு நடவடிக்கை என்றும் அரசு தரப்பில் கூறப் பட்டுள்ளது.
இந்த அத்தியாவசிய நடவடிக்கைக்கு குடிமக்கள் ஆதரவு தரும்படி மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் நமீபியா அரசு , அதேவேளையில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு மக்களே வனவிலங்குகளை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளது.