அமெரிக்காவில் ஜார்ஜியா உயர்நிலைப் பள்ளியில் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 14 வயது கோல்ட் கிரேவின் தந்தை கைது செய்யப் பட்டுள்ளார். கோல்ட் கிரே யின் தாயும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும் பலமுறை வீட்டு வன்முறை குற்றங்களுக்காக கைதானவர் என்றும் தெரிய வந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 14 வயதுடைய கோல்ட் கிரே என்னும் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 மாணவர்கள் உட்பட 2 ஆசிரியர்கள் கொல்லப் பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனை கைது செய்துள்ள ஜார்ஜியா புலனாய்வுப் பணியகத்தின் இயக்குனர் கிறிஸ் ஹோசி, கோல்ட் கிரே மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இவ்வூரில் உள்ள பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என ஆன்லைன் அச்சுறுத்தல்கள் பல வந்துள்ளன. அப்போது கோல்ட் கிரே சட்ட அமலாக்கத் துறையினரால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
துப்பாக்கிகளின் புகைப்படங்களை உள்ளடக்கிய குறிப்புக்களுடன் வந்த மிரட்டல் பற்றி கோல்ட் கிரேயின் தந்தையிடம் நடத்திய தீவிர விசாரணையில் வேட்டையாடும் துப்பாக்கி வீட்டில்உள்ளதாக தெரிவித்திருக்கிறார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அமலாக்கத் துறையினர் கோல்ட் கிரேயை அப்போது கைது செய்யவில்லை.
கடந்த கிறிஸ்துமஸ் பரிசாக தன் மகனுக்கு AR-15 வகை அரை தானியங்கி துப்பாக்கியை வாங்கி கொடுத்திருக்கிறார் கோல்ட் கிரேயின் தந்தை கொலின் கிரே. அந்த துப்பாக்கியைக் கொண்டு, பள்ளியில் துப்பாக்கி சூட்டை நடத்தி இருக்கிறான் கோல்ட் கிரே.
தனது மகனுக்குத் துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதித்தது உட்பட நான்கு தன்னிச்சையான ஆணவக் கொலைகள், இரண்டு இரண்டாம் நிலை கொலைகள் மற்றும் குழந்தைகளுக்கு எட்டுக் கொடுமைகள் உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கொலின் கிரே கைது செய்யப் பட்டுள்ளார். இரண்டாம் நிலை கொலை குற்றத்துக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையில் , துப்பாக்கி சூடு நடத்திய கோல்ட் கிரேயின் தாயான 43 வயதான மார்சி ,வீட்டு வன்முறை, போதைப்பொருள் வைத்திருந்தல், சொத்து சேதம் மற்றும் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து மீறல்கள் உட்பட பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் கைதாகி இருக்கிறார்.
மேலும் அவர் பயன்படுத்திய வாகனம் வாங்குவதில் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தங்கள் குழந்தை யாரையாவது சுட்டுக் கொன்றால், பெற்றோர்கள் பொதுவாக குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக மாட்டார்கள் என்றாலும், எதிர்காலத்தில் பெற்றோரும் குற்றச்சாட்டுகளைச் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.
கடந்த நவம்பரில் வர்ஜீனியாவைச் சேர்ந்த தேஜா டெய்லருக்கு, அவரது ஆறு வயது மகன் ஜனவரி மாதம் தனது ஆசிரியரை சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக, 21 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த 385வது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின்படி, இந்த ஆண்டு மட்டும் 384 வெகுஜன துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. அதன் விளைவாக 11,500 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.