தேனியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனி மாவட்டம், தேவாரத்தில் சிறு சிறு சிலைகளை வைக்கப்பட்டுள்ளது.
மறவப்பட்டி பகுதியில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக அப்பகுதி மக்கள் டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். சிந்தலசேரி பகுதியில் உள்ள குளத்தில் விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு வீடு திரும்பியபோது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த 3 அடி பள்ளத்தில் கவிழ்ந்து டிராக்டர் விபத்துக்குள்ளானது.
இதில் மறவப்பட்டியை சேர்ந்த விஷால், நிவாஸ், கிஷோர் ஆகிய 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.