இந்தியாவில் 27 சதவீத மாணவ, மாணவிகள் மட்டுமே 12-ம் வகுப்பை முடித்துவிட்டு கல்லூரிகளுக்கு செல்வதாகவும், எஞ்சிய 73 சதவீதம் பேர் 12ஆம் வகுப்புடன் தங்கள் படிப்பை முடித்துக் கொள்வதாக ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் எழுத்தாளர் கல்கியின் 125வது பிறந்தநாள் விழா மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நிலையில், “பேனா போராளி கல்கி” என்ற தலைப்பில் எழுத்தாளர் கல்கி பற்றிய காணொளி வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, 2047-ம் ஆண்டு இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், குறைந்தபட்சம் இளங்கலை பட்டமாவது பெற்றிருக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு நாம் பயணிக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
மேலும், தன்சானியா நாட்டில் ஐஐடி பல்கலைக் கழகத்தின் கிளையை ரிமோட் மூலமாக, இங்கிருந்து உருவாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தான் ஐஐடியில் படிக்கும் போது குறைந்த அளவிலான மாணவிகள் மட்டுமே கல்வி கற்ற நிலையில், தற்போது 20%க்கும் மேற்பட்ட மாணவிகள் ஐஐடியில் கல்வி கற்று வருவதாகவும் அவர் கூறினார்.